கலிவிருத்தம்

3405.சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல்
மேகமும் விண்ணின் மீச் செல்ல, 'மீமிசை
மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என,
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே.

    (சடாயுவின் சிறகில் இருந்து வீசும் பெருங்காற்றினால்) மரமும் -
மரங்களும்; சாகை வன் தலையொடு தாழ - கிளைகளோடு வலிய
தலைப்புறத்துடன் (பூமியில்) படியவும்; மேல் மேகமும் - மேல்
இடத்தில் உள்ள மேகங்களும்; விண்ணின் மீச் செல்ல - வானத்தின்
மேல் ஒதுங்கிப் போகவும்; மீமிசை மாக வெங் கலுழன் ஆம்
வருகின்றான் என -
மிக உயர்ந்த வான் வழியில் பெருமை உடைய
கொடிய கருடன் வருகின்றான் என்று எண்ணி; நாகமும் படம்
ஒளித்து -
நாகங்களும் படத்தை ஒடுக்கிக் கொண்டு; ஒதுங்கி நையவே -
மறைந்து பதுங்கி வருந்த.

     சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள்
கிளைகளோடும் தலைப்புறத்துடனும் விழவும், வானத்தில் செல்லும்
மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப்
பாம்புகள் படம் குறைந்து நையவும், வந்தனன் என்க. சாகை - கிளை,
மாகம் - பெருமை, ஒளித்து - ஒடுக்கி, கலுழன் - கருடன் மீமிசை -
ஒருபொருட் பன்மொழி.                                        3