3407.'உத்தமன் தேவியை, உலகொடு
     ஓங்கு தேர்
வைத்தனை! ஏகுவது
     எங்கு? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென்,
     ஈண்டு' எனா,
பத்திரச் சிறைகளை
     விரிக்கும் பண்பினான்;

    உத்தமன் தேவியை - கல்யாண குணங்கள் நிறைந்தஉத்தமனாகிய
இராமனது மனைவியை; உலகொடு ஓங்கு தேர்வைத்தனை - நிலத்தொடு
பெயர்த்து உயர்ந்த தேரில் வைத்தவனாய்; எங்கு ஏகுவது - நீஎங்குப்
போக முடியும்; வானினோடு இத்தனை திசையையும் -வானத்தோடு
(மற்றுமுள்ள) இத்தனை திசைகளையும்; ஈண்டுமறைப்பென் எனா -
இப்பொழுதே மறைத்து விடுவேன் என்றுசொல்லி; பத்திரச் சிறைகளை
விரிக்கும் பண்பினான் -
பாதுகாப்புச்(செய்ய உரிய) சிறகுகளை விரித்துப்
பரப்புகிற உயர் பண்புஉடையவனாய் எருவையின் மன்னன் வந்தனன்"
எனப் பொருள்முடிக்க.

     'உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில்வைத்து
நீ போவது எங்கே' என்று கூறி, தான் வானையும்திசைகளையும் இப்போதே
மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பானசிறகுகளை விரித்தபடி சடாயு
வந்தனன் என்க. உலகொடு என்பதைத்தேருக்கு ஆக்கி உலகத்தோடொப்ப
ஓங்கு தேர். "கீண்டான் நிலம்;யோசனை கீழொடு மேல்" (3390),
"கொண்டான் உயர் தேர் மிசை"(3391) என்றும், "தீண்டுற்றிலன் என்று
உணர் சிந்தையினான். (3409)என்றும் முன்னும் பின்னும் கவிஞர்
குறிப்பிட்டுள்ளதால் ஈண்டுநிலத்தொடு என்பதே பொருந்தும் என்க.
பத்திரம் - பாதுகாப்பு,வைத்தனை - முற்றெச்சம்.                     5