3408. | வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான் எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்; சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். |
மாண்பு இலான் - நல்ல பண்புகள் இல்லாதவனாகிய இராவணனது; எந்திரத்தேர் - எந்திரங்கள் பொருத்தப்பட்ட தேரின்; செலவு ஒழிக்கும் - செல்லுதலைத் தடுக்கும்; எண்ணினான் - கருத்தினைக் கொண்டவனும்; சிந்துரக் கால்சிரம் - சிந்தூரம் போல் மிகச் சிவந்த கால்களையும் தலையையும்; செக்கர் சூடிய கந்தரம் - செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாகி; கயிலையை நிகர்க்கும் காட்சியான் - கைலாய மலையை ஒக்கின்ற தோற்றத்தை உடையவனாய்; எருவையின் மன்னன் வந்தனன் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு, (இராவணனுக்கு எதிரில்) வந்து சேர்ந்தான். சடாயு இராவணன் தேர் செல்லுதலைத் தடுக்கும் கருத்துடன் சிவந்த கால்களோடும் தலையோடும் செக்கர் வானம் போன்ற கழுத்தோடும் கைலாய மலையை ஒக்கின்ற தோற்றத்தோடும் இராவணன் எதிரில் வந்தனன். எந்திரம் - பொறி; சக்கரம் என்றும் கூறுவர். சிந்துரம் - செந்தூரம் சிவப்பு நிறம் உடையது. கந்தரம் - கழுத்து. என்னும் அவ்வேலையின் கண் சொல்லன், கண்ணன், துண்டத்தன், மெய்யன், கிரிகள் பூழியின் உதிர, ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, இரு சிறை ஊதை மோத, மரமும் தாழ, மேகம் விண்ணின் மீச் செல்ல, நாகம் ஒதுங்கி நைய, வானமும் கானமும் மாறு கொள்ள, திசையையும் மறைப்பென் எனா, எண்ணினான். காட்சியான் - எருவையின் மன்னன் வந்தனன் எனக் குளகமாக வந்த ஆறு பாடல்களுக்கும் முடிபு கொள்க. 6 |