சடாயு இராவணனுக்கு அறிவுரை கூறல் 3409. | ஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்' எனா, தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான், மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய், மீண்டுற்று, உரையாடலை மேயினனால்: |
ஆண்டு உற்ற - அந்த இடத்திற்கு வந்த; அவ் அணங்கினை- அந்தச் சீதையை; அஞ்சல் எனா - (நீ) அஞ்சாதே என்று (சடாயு) கூறி; தீண்டுற்றிலன் என்று உணர்சிந்தையினான் - (இராவணன் அவளைத்) தொட்டான் இல்லை என்று உணர்ந்த மனத்தினை உடையவனாய்; மூண்டு உற்று எழு வெங்கதம் முற்றிலனாய் - பொங்கி எழுகின்ற கொடிய சினம் முதிராதவனாய்; மீண்டுற்று - மீண்டும்; உரையாடலை மேயினன் - (இராவணனை நோக்கி) உரையாடலைத் தொடங்கினான். ஆல் - ஈற்றசை. சீதைக்கு 'அஞ்சல்' என அபயம் கூறிய சடாயு, இராவணன் அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான். தீண்டுற்றிலன் - தீண்டினான் இல்லை, கதம் - சினம். மீண்டுற்று - மீண்டும் இப் படலத்தின் முதல் பாடலில் "எங்கு அடா போவது" "நில்நில் என்று இடித்த சொல்லன்" என்று சடாயு இராவணனை நோக்கிக் கூறியதாக வந்துள்ளதால் இங்குச் சடாயு கூறுவதை மீண்டுற்று உரையாடலை மேயினனால் என்றார். 7 |