3411.'பேதாய்! பிழை செய்தனை;
     பேர் உலகின்
மாதா அனையாளை
     மனக்கொடு, நீ
யாது ஆக நினைத்தனை?
     எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி
     யார் உளரோ?

    பேதாய் - அறிவற்றவனே; பிழை செய்தனை - நீ பெருந்தவறு
செய்துவிட்டாய்; பேர் உலகின் மாதா அனையாளை - (இப்) பெரிய
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாய் போல் தலையளி
செய்யும் சீதையை; நீ யாது ஆக மனக்கொடு நினைத்தனை - நீ
என்ன என்று மனத்தில் நினைத்துக் கொண்டாய்; எண்ணம் இலாய் -
சிந்தனை இல்லாதவனே; இனி நினக்கு ஆதாரம் யார் உளரோ -
இனி உனக்குப் பற்றுக் கோடாக யாவர் உளர், (ஒருவரும் இல்லை
என்றபடி).

     நீ உன் பற்றுக் கோட்டைப் பறி கொடுத்து விட்டாய் என்றபடி.
மூவுலகும் பூத்தானை நாபிக் கமலத்துப் பூத்த மாலின் மனைவியாம்
திருமகளின் திருவவதாரம் ஆகலின் சீதையைப் பேர் உலகின் மாதா
என்றார். திருமால் குற்றமுடையார் மாட்டுச் சினங்கொள்ளுங்கால்
புருஷகாரமாக நின்று இன் சொல் கூறிச் சினம் தணிப்பிக்க வல்ல
பிராட்டிக்கே அபராதம் எண்ணினை எனவே நினக்கு ஆதாரம் யாரும்
இல்லை என்றபடி. ஆதாரம் - பற்றுக்கோடு. மனக்கொடு - மனம் +
அத்து + கொடு என அத்துச் சாரியை தொக்க மனக்கொடு என்று
ஆயிற்று.                                                   9