3412. | 'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை மெய்யாக இராமன் விருந்திடவே, கை ஆர முகந்து கொடு, அந்தகனார், ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? |
ஐயா - ஐயனே; உமர் உய்யாமல் மலைந்து - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர் தப்பிப் பிழைக்க முடியாதபடி போர் செய்து; இராமன் ஆர் உயிரை மெய்யாக விருந்திட - இராமன் (அவர்களது) அருமையான உயிரைத் (தனக்கு) உண்மையான விருந்தாகக் கொடுக்க; அந்தகனார் கை ஆரமுகந்துகொடு - யமனார் கை நிறைய வாரி எடுத்து; புதிது உண்டது அறிந்திலையோ- புதிதாக (விருந்து) உண்டதை (நீ) அறியவில்லையோ?; ஏ - அசை. இராமன் உன் இனத்தவரை ஒருவனாய் நின்று அழித்தமை கண்டும் ஏன் இச்செயல் செய்தாய் என்கிறான் சடாயு. புதிது உண்டது - பல நாள் அரக்கர் தலைவனாம் இராவணனுக்கு அஞ்சி அரக்கர் உயிரைக் கவராத யமன் இராமன் உதவியால் அவர்கள் உயிரைக் கவர்ந்தமை பற்றி இவ்வாறு கூறினார். உமர் - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர். அந்தகனார் - எமன். 10 |