3414.'எல்லா உலகங்களும், இந்திரனும்,
அல்லாதவர் மூவரும், அந்தகனும்,
புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ?

    எல்லா உலகங்களும் - மூவுலகில் உள்ளவர் அனைவரும்;
இந்திரனும் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; அல்லாதவர்
மூவரும் -
இவர்கள் அல்லாது (உயர்ந்த) மும்மூர்த்திகளும்;
அந்தகனும் - யமனும்; புல்வாய் புலிகண்டது போல்வர் அலால் -
(இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது
போல் (அஞ்சி நடுக்கம் அடைவரே) அல்லாமல்; வில்லாளனை
வெல்லும் மிடுக்கு உளரோ -
வில்தொழில் வித்தகனாகிய இராமனை
வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார்.

     உலகத்தவரும், இந்திரனும், மூவரும் எமனும் வில்லாளனைக்
கண்டு மான் புலியைக் கண்டது போல் அஞ்சுவார்களே யல்லாமல்
அவனை வெல்லும் வலிமை உடையர் அல்லர் என்பதாம். அந்தகன் -
அழிவைச் செய்பவன், புல் வாய் - மான், மிடுக்கு - வீரம், வலிமை.
மூவர் - தொகைக் குறிப்புச் சொல். புல்வாய் - வேற்றுமைத்தி
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காலப் போக்கில்
காரண இடுகுறிப்பெயராயிற்று.                                 12