3415.'இம்மைக்கு, உறவோடும்
     இறந் தழியும்
வெம்மைத் தொழில், இங்கு,
     இதன்மேல் இலையால்;
அம்மைக்கு, அரு மா
     நரகம் தருமால்;
எம்மைக்கு இதம் ஆக
     இது எண்ணினை, நீ?

    இம்மைக்கு - இந்தப் பிறப்பில்; உறவோடும் இறந்தழியும்
வெம்மைத் தொழில் -
உறவினர்களுடன் இறந்து அழிந்து
படுவதற்குக் காரணமான கொடுமையான தொழில்; இங்கு இதன் மேல்
இலையால் -
இப்பொழுது (நீ செய்த) இச்செயலுக்கு மேல் வேறு
ஒன்றும் இல்லை; அம்மைக்கு - (இச்செயல்) மறுமையில்;
அருமாநரகம் தருமால் - (உனக்கு) தாங்கரிய பெரிய நரகத்தைத்
தரும்; இது எம்மைக்கு இதம் ஆக - (ஆகையால் இச்செயலை)
எப்பிறவிக்கு நன்மையாக; நீ எண்ணினை - நீ எண்ணினாய்?

     இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில்
பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய இத் தீச் செயலை
எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்? இம்மை -
இப்பிறவி, அம்மை - மறுமை, எம்மை - எப்பிறவிக்கு. இலை -
இடைக்குறை, மாநரகம் - உரிச்சொற்றொடர். இலையால் - தேற்றப்
பொருளில் ஆல் வந்தது. ஆல் - அசை.13