3417. | 'புரம் பற்றிய போர் விடையோன் அருளால் வரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும், உரம் பெற்றன ஆவன- உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடும் தனையே. |
புரம் பற்றிய - முப்புரங்களும் பற்றி எரியச் செய்த; போர் விடையோன் அருளால் - போர் ஆற்றல் உள்ள காளை வாகனனாகிய சிவபிரானது அருளால்; பெற்றவும் வரம் - (நீ) பெற்றுள்ள வரங்களும்; மற்று உள விஞ்சைகளும் - மற்றும் உள்ள போர் வித்தைகளும்; உண்மையினோன் - (அழியா) உண்மைப் பொருளாக உள்ள இராமன்; சாபம் பற்றிய சரம் விடும்தனையே - வில்லில் தொடுத்த அம்பை விடுகின்ற வரையில்; உரம் பெற்றன ஆவன - வலிமை உள்ளனவாம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும் உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும், அதற்கு மேல் நில்லா என்பதாம். உண்மையினோன் - சொன்ன சொல்லை நிறைவேற்றும் வாய்மை உடையோன் எனலுமாம். விஞ்சை- வித்தை சாபம் - வில், உம் - அசை. 15 |