3418. | 'வான் ஆள்பவன் மைந்தன், வளைத்த விலான் தானே வரின், நின்று தடுப்பு அரிதால்; நானே அவண் உய்ப்பென், இந் நன்னுதலை; போ, நீ கடிது' என்று புகன்றிடலும், |
வான் ஆள்பவன் மைந்தன் - விண் உலகை ஆளும் தசரதனுடைய மகனாகிய இராமன்; வளைத்த விலான் தானே வரின் - வளைத்த வில்லினை உடையவனாய் (நேரில்) தானே வந்து விட்டால்; நின்று தடுப்பு அரிது - அவன் எதிரே நின்று (அவனால் வரும் தீங்கினைத்) தடுப்பது அருமையானது; இந்நன்னுதலை - இந்த அழகிய நெற்றியை உடைய சீதையை; அவண் நானே உய்ப்பென் - முன்பு இருந்த இடத்திற்கு நானே கொண்டு போய்ச் சேர்க்கிறேன்; நீ கடிது போ - நீ விரைவாகப் போய்விடு; என்று புகன்றிடலும் - என்று சடாயு கூறிய அளவில் - கேட்டான் (நிருதர்க்கு இறை என அடுத்த பாடலில் முடியும்). இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என இராவணனிடம் சடாயு கூறினான். வான் ஆள்பவன் - முன்பு நிலவுலகை ஆண்டவன் தற்போது வானுலகை ஆள்கிறான் என்பதாம். தடுப்பு - தடுத்தல், விலான் - இடைக்குறை, முற்றெச்சம் எனலுமாம். நன்னுதல் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆல் - அசை. 16 |