இராவணன், "சீதையை விடேன்" எனல் 3419. | கேட்டான் நிருதர்க்கு இறை; கேழ் கிளர் தன் வாள் தாரை நெருப்பு உக, வாய் மடியா, 'ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக் காட்டாய் கடிது' என்று, கனன்று உரையா, |
கேட்டான் நிருதர்க்கு இறை - (சடாயு கூறிய சொற்களைக்) கேட்டவனாகிய அரக்கர்க்குத் தலைவன் ஆகிய இராவணன்; கேழ் கிளர் தன் - ஒளி விளங்குகின்ற தன்னுடைய; வாள் தாரை நெருப்பு உக - ஒளியுள்ள கண்ணின் கரு விழியில் இருந்து, சினத் தீ வெளிப்பட; வாய் மடியா - உதட்டைக் கடித்துக் கொண்டு; இனி நீ ஓட்டாய் - இனி மேல் நீ (வீண் சொற்களை) ஓட விடாதே; உரை செய்குநரைக் கடிது காட்டாய் - (நீ) சொல்லுகின்றவர்களை விரைவாகக் காட்டுவாய்; என்று கனன்று உரையா - என்று சினந்து சொல்லி - (இது 19ஆம் பாடலில் உள்ள "என்னும் அளவில்" என்பதோடு சென்று முடியும்) சடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய் மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறிவர்களைக் காட்டு' என்று சினந்து சொன்னான். கேழ் - ஒளி. வாள்தாரை - ஒளியுள்ள கண்ணின் கருவிழி, ஓட்டாய் - சொற்களை ஓடவிடாதே. மடியா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். ஓட்டாய் - ஒருமை எதிர் மறை ஏவல் வினை, காட்டாய் - ஒருமை உடன்பாட்டு ஏவல் வினை. 17 |