3420. | 'வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப் பெரும் புண் திறவாவகை பேருதி நீ; இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின் கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,' |
வரும் புண்டரம் - (என்னை எதிர்த்து) வருகின்ற கழுகே; உன் மார்பு வாளி உருவி - உனது மார்பினை (எனது அம்பு ஊடுருவி; பெரும் புண் திறவா வகை - பெரிய புண்ணாகத் திறப்பதற்கு முன்பே; நீ பேருதி - நீ (இவ்விடம் விட்டு) அப்பால் செல்க; இரும்பு உண்ட நீர் மீளினும் - (காய்ச்சப்பட்ட) இரும்பில்பட்ட நீர் மறுபடியும் வெளிப்படும் என்றாலும் கூட; என்னுழையின் - என்னிடத்தில் இருக்கின்ற; கரும்பு உண்ட சொல் மீள்கிலள் - கரும்புச் சாற்றினும் இனிய சொற்களைப் பேசுகிற (சீதை) மீண்டு செல்ல மாட்டாள்; காணுதி - (அதனைக்) காண்பாயாக; ஆல் -ஈற்றசை. என்னை எதிர்த்து வரும் கழுகே உன் மார்பினை என் அம்பு ஊடுருவிப் பெரும் புண்ணை உண்டாக்குவதற்கு முன்பே நீ அப்பால் செல்க. ஒரு கால் இரும்பு உண்ட நீர் மீண்டும் தோன்றினாலும் கூட இக் கரும்பு உண்ட சொல்லினள் ஆகிய சீதை மீளாள். என்பது கருத்து. புண்டரம் - கழுகு, புண்டரம், கங்கம், எருவை, பவணை கருஞ்சிறை, உவணம் என்பன கழுகைக் குறிக்கும் வேறு பெயர்களாம். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் பட்ட நீர் மீண்டும் வெளிப்படாதது போலச் சீதையும் என்னிடம் இருந்து மீள மாட்டாள் என்றபடி. புண்டரம் - அண்மை விளி, கரும்பு உண்ட சொல் - அடையடுத்த சினையாகுபெயர். 18 |