அஞ்சிய சீதைக்குச் சடாயு அபயம் கூறல்

கலித்துறை

3421. என்னும் அளவில், பயம்
     முன்னின் இரட்டி எய்த,
அன்னம் அயர்கின்றது நோக்கி,
     'அரக்கன் யாக்கை
சின்னம் உறும் இப்பொழுதே;
     "சிலை ஏந்தி, நங்கள்
மன்னன் மகன் வந்திலன்" என்று,
     வருந்தல்; அன்னை!

    என்னும் அளவில் - என்று (இராவணன்) கூறிய அளவில்;
பயம் முன்னின் இரட்டி எய்த - அச்சம் முன்பை விட இரு
மடங்காக; அன்னம் அயர்கின்றது நோக்கி - அன்னப்பறவை
போன்ற சீதை வருந்துவதைப் பார்த்து; அன்னை - (சடாயு சீதையைப்
பார்த்து) அன்னையே; இப்பொழுதே அரக்கன் யாக்கை சின்னம்
உறும் -
இப்பொழுதே அரக்கனாகிய இராவணனது உடம்பு (பல)
துண்டுகளாகும்; நங்கள் மன்னன் மகன் - நமது தலைவன் ஆகிய
தசரதனது மகன்; சிலை ஏந்தி வந்திலன் - வில்லைக் கையில் ஏந்தி
வந்தானில்லை; என்று வருந்தல் - என்று எண்ணி நீ வருந்தாதே.

     இராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட
இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு. இப்பொழுதேஅரக்கன் உடல்
துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக்காக்க வரவில்லையே
என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான்.சின்னம் - துண்டு; சின்ன
பின்னமாதல் என்ற வழக்கை நினைவுகூர்க. நங்கள் - உளப்பாட்டுத்
தன்மைப் பன்மை, அன்னை -அண்மை விளி.                     19