3422.'முத்து உக்கனபோல் முகத்து ஆலி
     முலைக்கண் வீழ,
தத்துற்று அயரேல்; தலை, தால
     பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டு, இவன்
     கொண்டன என்ற ஆசை
பத்திற்கும், இன்றே பலி ஈவது
     பார்த்தி' என்றான்.

    முத்து உக்கன போல் - முத்துக்கள் சிதறுவன போல; முகத்து
ஆலிமுலைக் கண் வீழ -
முகத்தில் இருந்து (கண்களில் இருந்து)
கண்ணீர்த் துளிகள் முலைகளிலே விழுமாறு; தத்துற்று அயரேல் -
(மனத்) துடிப்பு மிகுந்து தளராதே; தால பலத்தின் ஏலும் கொத்து
ஒப்பன -
பனம் பழங்களின் கொத்தினை ஒப்பனவாகிய; தலை கொண்டு-
(இராவணனது) பத்துத் தலைகளைக் கொண்டு; இவன் கொண்டன
என்ற ஆசை பத்திற்கும் -
இவன் (வெற்றி) கொண்டன என்று
கூறப்படுகின்ற திசை பத்திற்கும்; இன்றே பலி ஈவது பார்த்தி -
இப்பொழுதே (நான்) பலியாகக் கொடுப்பதை பார்ப்பாயாக; என்றான்-
என்று சடாயு கூறினான்.

சீதை அழுது கணணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம்
பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும்அவன்
வெற்றி பெற்றதாகக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும்நான் பலியாகக்
கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாக' என ஆறுதல்கூறினான். ஆலி -
கண்ணீர் தத்துற்று - கலக்கம் அடைந்து. தாலபலம் - பனம்பழம் ஆசை -
திசை. பலி - கடவுளர்க்குத் தரும்உணவு. இங்கு இராவணனின் பத்துத்
தலைக்குப் பனம் பழக் கொத்துஉவமையாக வந்தது.                 20