சடாயு போரிடல்

3423. இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ்
     சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு,
     முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும்
     நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து, உயர்
     வானவர் ஆசி கொண்டான்.

    இடிப்பு ஒத்தமுழக்கின் - இடியை ஒத்த பேரொலி உண்டாகும்
படி; இருஞ்சிறை வீசி எற்றி - பெரிய (தன்) சிறகுகளை வீசி
அடித்தபடி; கடிது உற்றவன் - விரைவாகப் பறந்து வந்தவனாகிய
(சடாயு); முடிப் பத்திகளைப் படி இட்டு - (இராவணனது) கீரிட
வரிசைகளை நிலத்தில் தள்ளி; முழங்கு துண்டம் கடிப்ப -
பேரொலியிடும் (அவன் தலைகளை) (தன்) (அலகினால்) துண்டுகளாகச்
(செய்ய வந்தவன்); காண் தகும் நீண்ட வீணைக் கொடிப் பற்றி
ஒடித்து -
காண அழகான நீண்ட வீணையின் வடிவம் எழுதப்பட்ட
(அவனது) கொடியைப் பற்றி ஒடித்து; உயர் வானவர் ஆசி
கொண்டான் -
சிறப்புடைய தேவர்களின் வாழ்த்துகளைப் பெற்றான்.

     இராவணனது தலை வரிசையை நிலத்தில் தள்ளித் துண்டாக்கப்
பேரொலியுடன் இருஞ்சிறை வீசி வந்த சடாயு அவனது வீணைக்
கொடியை ஒடித்து வானவர் ஆசி கொண்டான் என்க. வான்மீகத்தில்
இராவணனுக்குரிய கொடி மனிதத் தலை வடிவம் எழுதப்பட்டது என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பர் நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட
உரைத்த நாவினை உடையானது கொடியை இசைத் தொடர்புடைய
வீணைக் கொடியாக அமைத்துள்ள திறம் தேர்க. பத்தி - வரிசை, படி
- நிலம் இருஞ்சிறை - பண்புத்தொகை. கொடிப் பற்றி - இரண்டன்
தொகையில் செய்யுளின்பம் கருதி மிக்கது.                        21