3424. அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு
     அன்ன கண்ணன்,
எக் காலமும், இன்னது ஓர்
     ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான், உலகு ஏழும்
     நடுங்கிட; நாகம் அன்ன
கைக் கார்முகத்தோடு கடைப்
     புருவம் குனித்தான்.

    எக்காலமும் - முன்பு எப்பொழுதும்; இன்னது ஓர் ஈடு
அழிவுற் றிலாதான் -
இத்தகைய ஒரு பெருமை அழிவு
அடைந்திராதவனாகிய; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணன்;
அக்காலை - (தன் கொடி அறுபட்ட) அப்பொழுது; உருக்கு அரக்கு
அன்ன கண்ணன் -
உருக்கிய அரக்கைப் போன்று (சினத்தால்
சிவந்த) கண்களை உடையவனாய்; உலகு ஏழும் நடுங்கிட நக்கான்
-
உலகம் ஏழும் நடுங்கும்படி சினங்கொண்டு சிரித்தான்; நாகம்
அன்ன கைக்கார் முகத்தோடு -
மலையைப் போன்று தன் கையில்
உள்ள வில்லுடன்; புருவக் கடை குனித்தான் - (தன்) புருவங்களின்
நுனியையும் வளைத்தான்.

     இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத
இராவணன் சினங் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும்
வளைத்தான் என்க. ஈடு - பெருமை. நாகம் - மலை, கார்முகம் -
வில். கடைப் புருவம் - புருவ நுனி, நகுதலும் புருவ நுனியை
வளைத்தலும் சினக்குறி என்க.                                22