3425. சண்டப் பிறை வாள்
     எயிற்றான் சர தாரை மாரி
மண்ட, சிறகால் அடித்தான் சில;
     வள் உகீரால்
கண்டப்படுத்தான் சில;
     காலனும் காண உட்கும்
துண்டப் படையால், சிலை துண்ட
     துண்டங்கள் கண்டான்.

    பிறைவாள் சண்ட எயிற்றான் - பிறைநிலவு போன்ற ஒளி
பொருந்திய பற்களை உடைய இராவணனது; சர தாரை மாரி -
அம்புகளாகிய மழையின் மிகுதி; மண்ட - (தன்னை) மிகுதியாக
நெருங்க; சில சிறகால் அடித்தான் - சடாயு அவற்றுள் சிலவற்றைத்
தன் சிறகால் அடித்து விழுத்தினான்; சில வள் உகீரால் கண்டப்
படுத்தான் -
சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால்
துண்டுபடுத்தினான்; சிலை - வில்லைக்; காலனும் காண உட்கும்
துண்டப் படையால் -
யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய
படைக் கலத்தால்; துண்ட துண்டங்கள் கண்டான் - துண்டு
துண்டுகளாக ஆக்கினான்.

     பிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீதுபொழிந்த
அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும்,
இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான்.
சண்டம் - கொடுமையும் ஆம், மண்டுதல்- நெருங்குதல் உகீரால் -
உகிரால், நகத்தால் செய்யுள் ஓசைக்காகவந்த நீட்டல் விகாரம். துண்டப்
படை - மூக்காகிய படைக்கலம்;தாரை மாரி - உருவகம்.              23