3426. | மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம் வாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின்மீதும் நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன்-சேம வில் கால் கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். |
நெடுவெங்கண் அனந்த நாகம் - பெரிய கொடியகண்களையுடைய அளவில்லாத பாம்புகளை; வாட்டும் கலுழன் என- வாட்டும் கருடன் போல; வன் தலை பத்தின் மீதும் - (இராவணன்உடைய) வலிமையான தலைகள் பத்தின் மேலும்; நீட்டும் நெடுமூக்கு எனும் நேமியன் - (கொத்தி அழிக்க) நீட்டிய நீண்ட மூக்குஎன்னும் சக்கரப் படையை உடையவனாய்; சேமவில் கால் கோட்டும்அளவில் - (இராவணன் தன்னைப்) பாதுகாக்கும் மற்ற ஒரு சேமவில்லின் இரு முனைகளையும் வளைத்த அளவிலே; மீட்டும் அணுகா- மறுமுறையும் (அவனை) நெருங்கி; மணிக்குண்டலம் கொண்டுஎழுந்தான் - (அவன் காதுகளில்) அணிந்துள்ள இரத்தின மணிக்குண்டலங்களைப் பறித்துக் கொண்டு பறந்து எழுந்தான். பாம்புகளை வாட்டும் கருடன் போல் வந்து இராவணனதுதலையைத் தரையில் உருட்டத் தன் நெடு மூக்கு எனும் சக்கரப்படையை நீட்டிய சடாயு, அவன் சேம வில்லை வளைப்பதற்குள்விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச்சென்றனன் என்க. சேமவில் - உற்ற காலத்து உதவும் அதிகப்படியான வில். உரிய வில் பழுதாகும் போது சேமவில் பயன்படும்.வண்டிக்கு வலிமை சேர்க்க அமைக்கப்படும் அச்சு "சேம அச்சு" என்று கூறப்படுவதையும் ஈண்டு நினைக்க. அனந்தம் - மிகுதி. நேமி - சக்கரம். நேமியன் - முற்றெச்சம். 24 |