3428.புண்ணின் புது நீர் பொழியப் பொலி
     புள்ளின் வேந்தன்,
மண்ணில், கரனே முதலோர்
     உதிரத்தின் வாரிக்-
கண்ணில் கடல் என்று
     கவர்ந்தது கான்று, மீள
விண்ணில் பொலிகின்றது ஓர்
     வெண் நிற மேகம் ஒத்தான்.

    புண்ணின் - (தன் உடம்பில் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட)
புண்ணில் இருந்து; புதுநீர் பொழியப் பொலி - புதுக் குருதி
மிகுதியாக வடிந்தும் பொலிவு மாறாத; புள்ளின் வேந்தன் -
பறவைகளுக்கு அரசனாகிய சடாயு; மண்ணில் கரனே முதலோர்
உதிரத்தின் வாரி -
நிலத்தில் பெருகி ஓடிய கரன் முதலிய
அரக்கர்களது குருதி வெள்ளத்தை; கண்ணில் கடல் என்று கவர்ந்து-
பெருமை உடைய கடல் என்று கருதிப் பருகிய (வெண் மேகம்);
அது கான்று மீள - அந்நீரைப் பின்பு சொரிந்து; விண்ணில்
பொலிகின்றது -
வானத்தில் அழகு பெற விளங்குகிற; ஓர் வெண் நிற
மேகம் ஒத்தான் -
ஒப்பற்ற வெண்மை நிறம் உடைய மேகத்தை
ஒத்திருந்தான்.

     கடல் நீரை முகந்து வெண்மேகம் கருமேகமாகி மழை பெய்த
பிறகு மீண்டும் வெண் மேகம் ஆதல் இயல்பு. இறந்தவர்களின்
குருதியைப் பருகும் வாழ்க்கை உள்ள கழுகுகளுக்கு அரசனாகிய
சடாயு வெண்மை நிறம் உடையவன். கண் - பெருமை. காலுதல் -
வெளியிடுதல்.                                             26