3429. ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்;
     அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில்
     தத்தி, மூக்கால்
கொத்தா, நகத்தால் குடையா,
     சிறையால் புடையா,
முத்து ஆர மார்பில் கவசத்தையும்
     மூட்டு அறுத்தான்.

    ஒத்தான் - வெண் மேகத்தை ஒத்தவன் ஆகிய சடாயு; உடனே
உயிர்த்தான் உருத்தான் -
உடனடியாகப் பெருமூச்சு விட்டுச் சினந்து;
அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும்பத்தியில் - அந்த
(இராவணனது) தோள்கள் ஆகிய இருபதின் வரிசையில்; தத்தி -
பாய்ந்து ஏறி; மூக்கால் கொத்தா - மூக்கினால் கொத்தியும்; நகத்தால்
குடையா -
நகத்தால் பிறாண்டியும்; சிறையால் புடையா -
சிறகுகளால் அடித்தும்; முத்து ஆர மார்பில் - (அவனது) முத்து
மாலை அணிந்த மார்பில் விளங்கிய; கவசத்தையும் மூட்டு
அறுத்தான் -
கவசத்தையும் மூட்டுவாய் அறும்படி செய்தான்.

     அம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி,
கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிறகவசத்தின்
மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க. ஒத்தான் - முன்பாடலில் கூறிய
படி வெண் மேகத்தை ஒத்தவன் என்றபடி. பத்தி -வரிசை, தத்தி - பாய்ந்து
ஏறி, மூட்டறுத்தல் - இணைப்பு வாய்நெகிழும் படி செய்தல். கொத்தா,
குடையா, புடையா - செய்யாஎன்னும் வாய்பாட்டு உடன்பாட்டு
வினையெச்சங்கள் முந்தையபாடலும் இதுவும் அந்தாதித் தொடையில்
அமைந்து உள்ளமைகாண்க.                                    27