3430. | அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் பறவைக்கு இறை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. |
அறுத்தானை - (தன்) கவசத்தை மூட்டு அறுத்த சடாயுவினுடைய; தட மார்பில் - பரந்த மார்பில்; அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் - அரக்கனாகிய இராவணனும் நூறு அம்புகளை அழுந்துமாறு எய்தான்; செறித்தலும் அவன் அவ்வாறு (அம்புகளைப்) பதியுமாறு அழுத்திய அளவில்; தேவர் அஞ்சி வெறித்தார் - தேவர்கள் அஞ்சித் திகைத்தார்கள்; வெறியாமுன் - (அவர்கள் அவ்வாறு) திகைப்பதற்கு முன்பே; பறவைக்கு இறை - (கழுகு என்னும்) பறவைகளுக்கு அரசன் ஆகிய சடாயு; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர் கூட்டம் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய; இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் - இராவணனது வில்லைத் (தன்) அலகினால் இழுத்துப் பிடுங்கினான். தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான். வெறித்தல் - திகைத்தல், பல் - ஈண்டு மூக்கு, பண்ணை - கூட்டம், அறுத்தான் - வினையாலணையும் பெயர். தடமார்பு - உரிச்சொல் தொடர். முந்தைய பாடலும் இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க. சடாயு இராவணன் போர் தொடர்ந்து இடையீடின்றி நடந்தது. 28 |