3431. | எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும் மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி, வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான்- சொல் இட்டு அவன் தோள் வலி, யார் உளர், சொல்ல வல்லார்? |
எல் இட்ட - ஒளி பொருந்திய; வெள்ளிக் கயிலைப் பொருப்பு - வெள்ளி போல் (வெண்ணிறம்) விளங்கும் திருக் கைலாய மலையை; ஈசனோடும் - சிவபிரானோடு; மல் இட்ட தோளால் எடுத்தான் - (தன்) வலிமை மிக்க தோள் ஆற்றலால் எடுத்தவனாகிய (இராவணனது); சிலை வாயின் வாங்கி - வில்லை மூக்கால் பறித்துக் (கௌவி); வில் இட்டு உயர்ந்த நெடுமேகம் எனப் பொலிந்தான் - இந்திரவில் விளங்க உயர்ந்த பெரிய மேகம் என்னுமாறு (அச்சடாயு) விளங்கினான்; அவன் தோள் வலி - (எனவே) அச்சடாயுவின் தோளாற்றலை; சொல் இட்டுச் சொல்ல வல்லார் யார் உளர் - சொற்களைக் கொண்டு சொல்லி (விளக்க) வல்லவர்கள் யாவர் உளர். ஒருவருமில்லை என்பதாம். வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள் வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் யாரால் சொல்ல முடியும்? முடியாது என்றபடி, எல் - ஒலி, மல் -வலிமை. மற்போர் செய்து பெற்ற வலிமை எனினும் பொருந்தும்.தோள் வலி - பறவைக்குத் தோள் இன்மையால் உடல் வலிமை எனக்கொள்ளலாம். 29 |