3432.மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன்
     விண்ணின் ஓட,
வாளால் ஒறுத்தான் சிலை
     வாயிடைநின்றும் வாங்கி,
தாளால் இறுத்தான், - தழல்வண்ணன்
     தடக் கை வில்லைத்
தோளால் இறுத்தான் துணைத் தாதைதன்
     அன்பின் தோழன்.

    மீளா நிறத்து - போரில் பின்னிடாத மார்பினை உடைய;
ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட - (உடலில்) ஆயிரம்
கண்களை உடைய இந்திரன் வானத்தில் (தோற்று) ஓடுமாறு; வாளால்
ஒறுத்தான் -
(அவனைத் தன் சந்திரகாசம் என்ற) வாளினால்
தண்டித்து வென்றவனாகிய இராவணன் உடைய; சிலை வாயிடை
நின்றும் வாங்கி -
வில்லினைத்தன் வாயில் இருந்து எடுத்து; தாளால்
இறுத்தான் -
(தன்) கால்களால் ஒடித்தான்; தழல் வண்ணன் -
நெருப்பைப் போன்று சிவந்த நிறமுடைய சிவபிரானது; தடக்கை
வில்லை -
கையில் இருந்த வில்லைத்; தோளால் இறுத்தான் - (தன்)
தோள் ஆற்றலால் ஒடித்தவனாகிய இராமனது; துணை - துணையாய்
அமைந்தவனும்; தாதை தன் அன்பின் தோழன் - (அவனது)
தந்தையாகிய தசரதனுக்கு அன்புடைய தோழனும் ஆகிய (சடாயு).

     இராவணனது வில்லை அலகால் கௌவிப் பிடுங்கிய சடாயு
அதைத் தன் தாளால் இறுத்தான் என்க. சிவன் வில்லைக் கையால்
ஒடித்தவனாகிய இராமனுக்குத் துணைவனும், தசரதன் தோழனும்
ஆகிய சடாயு இராவணன் வில்லைக் காலால் ஒடித்தான் என நயம்
படக் கூறியமை காண்க. இராமன் தழல் வண்ணன் தடக்கை வில்லைத்
தோளால் இறுத்தது.

     தடுத்து இமையால் இருந்தவர், தாளில்
     மடுத்ததும், நாண்நுதி வைத்ததும் நோக்கார்;
     கடுப்பினில் யாரும் அறிந்திலர், கையால்
     எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார் (699)

     என்று கார்முகப் படலத்தில் கூறப்பட்டுள்ளமை காண்க. மீளாநிறம் -
பின்னிடாத மார்பு; நிறம் - மார்பு. ஒறுத்தான் - தண்டித்துவருத்தினவன்,
இராவணன். மீளா - ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம்.            30