3433.ஞாலம் படுப்பான், தனது ஆற்றலுக்கு
     ஏற்ற நல்வில்
மூலம் ஒடிப்புண்டது கண்டு,
     முனிந்த நெஞ்சன்,
ஆலம் மிடற்றான் புரம் அட்டது
     ஓர் அம்பு போலும்
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான்,
     மறம் தோற்றிலாதான்.

    ஞாலம் படுப்பான் - உலகுக்கு அழிவைச் செய்பவனும்; மறம்
தோற்றிலாதான் -
யாருக்கும் வீரத்தில் தோல்விஅடையாதவனும்
ஆகிய இராவணன்; தனது ஆற்றலுக்கு ஏற்ற - தனது வலிமைக்குப்
பொருத்தமான; நல்வில் மூலம் ஒடிப்புண்டது கண்டு - நல்ல
(வலிய) வில் முழுதும் ஒடிக்கப்பட்டது கண்டு; முனிந்த நெஞ்சன் -
சினமடைந்த நெஞ்சத்தனாய்; ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர்
அம்பு போலும் -
ஆலகால நஞ்சை மிடற்றில் கொண்ட (நீலகண்டன்)
முப்புரத்தை அழிப்பதற்காகக் (கைக் கொண்ட) ஒப்பற்ற (திருமால்
ஆகிய) அம்பு போன்ற; சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் -
சூலப்படையைக் (கையில்) எடுத்துப் பேரொலியோடு (சடாயுவின் மீது)
வீசினான்.

     இராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது
கண்டு முனிவு கொண்டு, நீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக்
கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின்
மீது எறிந்தான் என்க. மூலம் - முழுதும்,                         31