3435.பொன் நோக்கியர்தம் புலன்
     நோக்கிய புன்கணோரும்,
இன் நோக்கியர் இல் வழி
     எய்திய நல் விருந்தும்,
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர்
     தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும், ஆம்
     என மீண்டது, அவ்வேல்.

    அவ்வேல் - (இராவணன் சடாயுவை நோக்கி எறிந்த) அந்த
முத்தலை வேல்; பொன் நோக்கியர் தம் - பொருளின் வரவு குறித்த
கருத்துடையவர்களான பொது மகளிரது; புலன் நோக்கிய
புன்கணோரும் -
ஐம்புல இன்பத்தை விரும்பிய
வறுமையுடையவர்களும்; இன் நோக்கியர் இல்வழி - இனிய
நற்பார்வை உடைய மகளிர் இல்லாத இடத்திற்கு; எய்திய
நல்விருந்தும் -
சென்று அடைந்த நல்ல விருந்தினர்களும்; தன்
நோக்கிய நெஞ்சுடை -
தன் ஆன்ம சொரூபத்தைத் தானே
தரிசிக்கும் மனப்பக்குவமுடைய; யோகியர் தம்மைச் சார்ந்த -
முனிவர்கள் மேல் சென்று சார்ந்த; மென் நோக்கியர் நோக்கமும் -
மென்மையான பார்வை உடைய பெண்களுடைய ஆசைப் பார்வையும்;
ஆம் என - ஒப்பு ஆகும் என்று கூறும் படி; மீண்டது -
(சடாயுவின் மார்பில்பட்டுத் துளைக்க முடியாமல்) மீண்டது.

     இராவணன் எறிந்த வேல் சடாயுவின் மார்பைத்துளைக்க
மாட்டாமல் மீண்டது என்க. முத்தலைச் சூலத்திற்கு மூன்று உவமைகள்
கூறியுள்ளமை காண்க. 1) பொருட்பெண்டிரை விரும்பும் வறியோன். 2)
நன் மகளிர் இல்லா வீட்டிற்கு வந்த விருந்தினர் 3) ஆன்ம
சொரூபியாகிய யோகியின் மீது ஆசை கொண்ட பெண்டிர், ஆகியோர்
வறிதே திரும்புதல் போல முத்தலை வேலும் வறிதே மீண்டது என்க.
பொன் நோக்கியர் - பொருட்பெண்டிர், புலன் - ஐம்புலன் இன்பம்.
இன் நோக்கியர் - முகந் திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள்,
90) என்பதனைக் கருதிக் கூறியது. தன் நோக்கிய நெஞ்சுடை
யோகியர் - அட்டாங்க யோகத்தில் சமாதி கூடியவர்.              33