3436. | வேகம்முடன், வேல் இழந்தான் படை வேறு எடாமுன், மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப் பாகன் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். |
வேல் இழந்தான் - தன் முத்தலைச் சூலத்தை (ப் பயன் இல்லாமல்) இழந்த இராவணன்; வேகம்முடன் - மிக விரைவாக; வேறு படை எடா முன் - வேறு படைக் கலத்தை எடுப்பதற்கு முன்பே; மாகம் மறையும் படி - பெரிய வானமும் மறையும் படியாக; நீண்ட வயங்கு மான் தேர்ப்பாகன் - உயர்ந்து விளங்குகின்ற குதிரைகள் பூட்டப் பெற்ற (இராவணனது) தேர்ப்பாகனுடைய; தலையைப் பறித்து - தலையைத் துண்டித்து; படர் கற்பினாள் பால் - (ஆழமாகப்) படர்ந்த கற்பினை உடைய சீதையின் மேல்; மோகம் படைத்தான் - காம மயக்கம் கொண்டவன் ஆகிய (இராவணன்); உளைவு எய்த - வருத்தம் அடையும் படி; முகத்து எறிந்தான் - அவனது முகத்தில் (தலையை) வீசி எறிந்தான். வேலை வெறுமனே போக்கிய இராவணன் வேறு படை எடாமுன் சடாயு பாய்ந்து தாக்கித் தேர்ப்பாகனது தலையைக் கொய்துஅதை அவன் முகத்தில் வீசினான். மாகம் - திசை. மோகம் - காமமயக்கம், உளைவு - வருத்தம். மான் - விலங்கு; ஈண்டுக் குதிரையைக்குறித்தது. வேகம்முடன், மாகம் மறையும் படி - மகர ஒற்று விரித்தல்விகாரத்தால் வந்தது. 34 |