3437. எறிந்தான்தனை நோக்கி, இராவணன்,
     நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான்; முனிந்து, ஆண்டது ஒர்
     ஆடகத் தண்டு வாங்கி,
பொறிந்தாங்கு எரியின் சிகை
     பொங்கி எழ, புடைத்தான்;
மறிந்தான் எருவைக்கு இறை, மால்
     வரை போல மண்மேல்,

    எறிந்தான்தனை நோக்கி - (தன் முகத்தில் தேர்ப் பாகனது)
தலையை எறிந்தவனாகிய சடாயுவைப் பார்த்து; இராவணன் நெஞ்சின்
ஆற்றல் அறிந்தான் -
இராவணன் (அவனது) மன வலிமையை
அறிந்து; முனிந்து - சினந்து; ஆண்டது ஒர் ஆடகத் தண்டு
வாங்கி -
அப்போது ஒப்பற்ற பொன்னால் ஆகிய கதையைக்
(கையில்) எடுத்து; எரியின் சிகை பொறிந்தாங்கு பொங்கி எழ -
நெருப்புச் சுவாலை நெருப்புப் பொறி பறப்பது போல் பொங்கி எழுந்து
வெளிப்பட; புடைத்தான் - அத்தண்டினால் தாக்கினான்; எருவைக்கு
இறை -
கழுகுகளுக்குத் தலைவன் ஆகிய (சடாயு); மால்வரை போல -
பெரிய மலை விழுந்தது போல; மண் மேல்மறிந்தான் - மண் மேல்
விழுந்தான்.

     தேர்ப்பாகனது தலையைப் பறித்துத் தன் முகத்தின் மீது எறிந்த
சடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்துபொன்னால்
ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க
அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தான்.
ஆடகத் தண்டு - பொன் மயமான கதை.முற்பாடலுடன் இதற்கு உள்ள
அந்தாதித் தொடை காண்க.                                    35