3438. மண்மேல் விழுந்தான் விழலோடும்,
     வயங்கு மான் தேர்,
கண்மேல் ஒளியும் தொடராவகை,
     தான் கடாவி,
விண்மேல் எழுந்தான்; எழ,
     மெல்லியலாளும், வெந் தீ
புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்
     போல், புரண்டாள்.

    மண் மேல் விழுந்தான் - சடாயு (இராவணனது
பொற்கதையால் அடியுண்டு) நிலத்தின் மீது விழுந்தான்; விழலோடும்-
(அவ்வாறு அவன்) விழுந்த அளவில்; வயங்கு மான் தேர் -
விளங்குகிற குதிரைகள் பூட்டப்பட்ட (தனது) தேரை; கண் மேல்
ஒளியும் தொடரா வகை -
கண்ணினது பார்வையும் பின்பற்றிச்
செல்ல முடியாதபடி; தான் கடாவி - மிக விரைவாகச் செலுத்தி; விண்
மேல் எழுந்தான் -
(இராவணன் இலங்கையை நோக்கிப் போக)
வானத்தில் எழுந்தான்; எழ - (அவன் அவ்வாறு) எழுந்த அளவில்;
மெல்லியலாளும் - மென்மைத் தன்மை உள்ள சீதையும்; புண் மேல்
வெந்தீ நுழைய -
புண்ணில் வெப்பமான நெருப்பு நுழைந்தால்;
துடிக்கின்றனள் போல் புரண்டாள் - துடிப்பவள் போல்
(துன்பத்தால்) புரண்டாள்.

     இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன்அவன்
தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டுஇலங்கையை
நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது
போல் துன்புற்று வருந்திப் புரண்டாள். கடாவி- செலுத்தி,            36