3439. | கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கியகொள்கை கண்டான்; 'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்!' என்னா, எழுந்தான்; உயிர்த்தான்; 'அட! எங்கு இனிப் போவது?' என்னா, விழுந்தான் அவன் தேர்மிசை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. |
கொழுந்தே அனையாள் - இளந்தளிர் போன்று (மிக்க மென்மைத் தன்மை உடைய) சீதை; குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் - வாடி வருந்திய செயலைக் கண்டவன் ஆகிய சடாயு; அன்னம் - அன்னப்பறவை போன்றவளே; அவலத்திடை அழுந்தேல் - துன்பத்தில் மூழ்க வேண்டாம்; அஞ்சலை - அஞ்சாதே; என்னா - என்று (ஆறுதல் கூறி); உயிர்த்தான் எழுந்தான் - பெருமூச்சு விட்டு எழுந்தான்; அட இனி எங்குப் போவது என்னா - அடே இனி (நீ) எங்கு (த் தப்பிப்) போவது என்று சொல்லி; அவன் தேர்மிசை - அந்த இராவணனது தேரின் மீது; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர்களின் கூட்டம் (மகிழ்ச்சிப்) பேரொலி செய்ய; விழுந்தான் - பாய்ந்தான். மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி அவலிக்காதே' என ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச் செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மிசைப் பாய்ந்தான். கொள்கை - செய்கை. பண்ணை - மகளிர் விளையாட்டாயம். ஈண்டுக் கூட்டத்தைக் குறித்தது. அஞ்சலை - முன்னிலை ஒருமை வினைமுற்று. அன்னம் - உவமையாகு பெயர்; இங்கு அண்மை விளியாய் வந்தது. 37 |