3440. | பாய்ந்தான்; அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்; ஏய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித் தீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல் துண்ட வாளால் காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்த்தான். |
பாய்ந்தான் - (இராவணன் தேரின் மீது) பாய்ந்தவனாகிய சடாயு; அவன் - அந்த இராவணனின்; பல் மணித் தண்டு பறித்து எறிந்தான் - பல மணிகள் பதிக்கப் பெற்ற தண்டாயுதத்தைப் பறித்து வீசினான்; ஏய்ந்து ஆர் கதித்தேர் - பொருந்தி அமைந்த வேகத்தினை உடைய தேரின் கண் பூட்டப்பட்டுள்ள; பரி எட்டினொடு எட்டும் - குதிரைகள் பதினாறும்; எஞ்சித் தீய்ந்து ஆசு அற - ஓங்கி அழிந்து ஒழியும் படி; அத்திண் திறல் துண்ட வாளால் - அந்த வலிமை உடைய மூக்காகிய தனது வாளால்; காய்ந்தான் வீசி - சினந்து வீசி; உயிர் கவர்ந்தான் - (அக்குதிரைகளின்) உயிரை உண்டான்; காலனும் கை விதிர்த்தான் - அவ்வீரச் செயல் கண்டு யமனும் (அஞ்சிக்) கை நடுக்கம் கொண்டான். இராவணன் மேல் பாய்ந்த சடாயு தன்னைத் தாக்கிய தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து, மிக்க சினத்துடன் இராவணனது தேரில் பூட்டப்பட்டிருந்த பதினாறு குதிரைகளையும் உயிரொழித்தான். அது கண்டு யமனும் அச்சத்தால் நடுங்கினான். கதி - வேகம், துண்டவாள் - வாள் போல் கூர்மையான அலகு, கை விதிர்த்தான் - கை நடுக்கமுற்றான். 38 |