3441. | திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை, மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். |
திண் தேர் அழித்து - (சடாயு மேலும் இராவணனது) வலிய தேரை அழித்து; ஆங்கு - அதற்குப் பிறகு; வில் இலாமை - (அவனது கையில்) வில் இல்லாமையால்; மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் - நெருங்கிச் செய்யும் கொடிய போருக்கு உதவும் அம்புகளைத் தராமையால்; வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன - உலோபிகளுடைய கருவூலத்தை ஒத்து அமைவனவாகி; விண்தான் மறைப்பச் செறிகின்றன - ஆகாயத்தைக் கூட மறைக்கும்படி பொருந்தி உள்ள; அவன் திண் புறம் சேர்ந்த தூணி - அவனது வலிமையான தோள்களின் புறத்தில் கட்டப்பட்டுள்ள, அம்பு அறாத் தூணியை; வள் உகிரால் பறித்தான் - (தன்) கூர்மையான நகங்களால் பறித்து எறிந்தான். சடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பு அறாத் தூணியையும் பறித்து எறிந்தான். வச்சைமாக்கள் பண்டாரம் - கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை என்றபடி. வச்சை மாக்கள் - உலோபிகள். பண்டாரம் - கருவூலம். திண் தேர் - பண்புத் தொகை. 39 |