3442. | மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள் மேலும் ஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்; 'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?' எனப் புகன்றான். |
மார்பினும் தோள்கள் மேலும் - (பின்பு சடாயு இராவணன் உடைய) மார்பின் மேலும் (இருபது) தோள்கள் மேலும்; மாச்சிச்சிரல் பாய்ந்தென - பெரிய சிச்சிலிப் பறவை பாய்வது போல் (பாய்ந்து); சிறகால் ஓச்சிப் புடைத்தான் - (தன்) சிறகுகளால் விரைவாக எறிந்து அடித்தான்; இராவணனும் - அதனால் இராவணனும்; உலையா விழுந்து - வருந்தி விழுந்து; முடிசாய்ந்து மூச்சித்த இருந்தான் - தலை சாய்த்து மயங்கிய நிலையில் இருந்தான்; இத்தனை போலும் - (அத்தன்மை கண்டு சடாயு) இத்தனைதானா; நின் ஆற்றல் - உனது வலிமை; போச்சு எனப்புகன்றான் - போய் விட்டது என்று (இகழ்ச்சியாகக்) கூறினான். மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனதுமார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தான். அதனால்இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கி, இருந்தான்; அது கண்டசடாயு 'இது தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். சிரல் -சிச்சிலி, மீன் கொத்தி. போச்சு - போயிற்று பேச்சு வழக்கு உலையா -செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். 40 |