3443. அவ்வேலையினே முனிந்தான்; முனிந்து,
     ஆற்றலன்; அவ்
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம்
     படை வேறு காணான்;
'இவ் வேலையினே, இவன் இன் உயிர்
     உண்பென்' என்னா,
செவ்வே, பிழையா நெடு வாள் உறை
     தீர்த்து, எறிந்தான்.

    அவ்வேலையினே - (உன் வலிமை போச்சு இத்தனை போலும்
நின் ஆற்றல்) என்று (சடாயு கூறிய) அந்த நேரத்தில்; முனிந்தான்
முனிந்து -
(இராவணன்) சினம் கொண்டான் முனிந்து; ஆற்றலன் -
(அச்) சினத்தை ஆற்றமுடியாதவனாகிய; அவ்வெவ்வேல் அரக்கன்-
அந்தக் கொடிய வேலை ஏந்திய அரக்கன்; விடல் ஆம் படை
வேறு காணான் -
(சடாயுவின் மீது) விடுதற்கு உரிய படைக் கலங்கள்
வேறு ஒன்றையும் காணாதவனாய்; இவ் வேலையினே -
இப்பொழுதே; இவன் இன் உயிர் உண்பென் என்னா - இந்தச்
சடாயுவினுடைய இனிய உயிரை உண்பேன் என்று சொல்லி; செவ்வே
பிழையா நெடுவாள் -
(பகைவரைக்) கொல்லுதல் தப்பாத நீண்ட தன்
சந்திரகாசம் என்னும் வாளை; உறை தீர்த்து எறிந்தான் - உறையில்
இருந்து (வெளியில்) எடுத்து வீசினான்.

     சடாயுவால் படைக்கலங்களை இழந்து இகழப்பட்ட இராவணன்சினந்து
'இப்பொழுதே இவன் உயிர் உண்பேன்' என்று தன் தப்பாதவாளை எடுத்து
வீசினான். சந்திரகாசம் என்ற வாள் கைலாயத்தைத்தூக்க முயன்ற காலத்துச்
சிவபிரான் கொடுத்தது "அரன் தடக்கைவாள் கொண்டாய்" (2835) என
வருதலும். தார் அணி மவுலி பத்தும்,சங்கரன் கொடுத்த வாளும் (7272)
என்று கூறியுள்ளதும் இது குறித்தேஎன்க.                          41