இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

3444. வலியின்தலை தோற்றிலன்; மாற்ற
     அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும்,
     வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது; ஆகலின்,
     விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஒர்
     குன்றின், வீழ்ந்தான்.

    மாற்ற அருந் தெய்வ வாளால் - (யாராலும்) தடுத்தற்கு அரிய
தெய்வம் தந்த வாளால்; தலை நலியும் என்றது அன்றியும் -
எல்லோருடைய தலையும் தவறாது அழியும் என்பதன்றியும்;
வாழ்க்கை நாளும் - ஆயுட் கால நாளும்; மெலியும் கடை
சென்றுளது ஆகலின் -
குறைவுபட்டு இறுதிக் (காலத்துக்குச்) சென்று
அடைந்து விட்டது ஆகையால்; வலியின் தலை தோற்றிலன் -
யாருக்கும் (இதுவரை) வலிமையில் தோற்காதவன் ஆகிய சடாயு;
விண்ணின் வேந்தன் - தேவர் தலைவன்; குலிசம் எறிய - (தன்)
வச்சிரப் படையை வீச; சிறை அற்றது ஒர் குன்றின் வீழ்ந்தான் -
(அதனால்) சிறகு அற்று வீழ்ந்த ஒரு மலை போல் விழுந்தான்.

     இராவணன் வீசிய தெய்வ வாள் தப்பாமல் எதையும் அழிக்கும்
தன்மை உடையது ஆதலாலும், சடாயுவின் வயது எண்ணரும்
பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும்
யார்க்கும் தோலாதான் வச்சிரப் படை சிறகு அறுத்த மலை போல்
விழுந்தான். குலிசம் - வச்சிரப் படை.                           42