சானகியின் துயரம்

3445.விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன்,
     மண்ணின்; விண்ணோர்,
இரிந்தார்; 'இழந்தாள் துணை' என்ன,
     முனிக் கணங்கள்
பரிந்தார்; படர் விண்டுவின் நாட்டவர்
     பைம் பொன் மாரி
சொரிந்தார்; அது நோக்கிய சீதை
     துளக்கம் உற்றாள்.

     விரிந்து ஆர்சிறை - விரிந்து பொருந்திய சிறகுகள்; கீழ் உற -
(துண்டாகிக்) கீழே கிடக்கும்படி; மண்ணின் வீழ்ந்தனன் - (சடாயு)
மண்ணின் மேல் விழுந்தான்; விண்ணோர் இரிந்தார் - (அது கண்டு)
தேவர்கள் (அஞ்சி) ஓடினார்கள்; முனிக்கணங்கள் - முனிவர் கூட்டங்கள்;
துணை இழந்தாள் என்ன படர் பரிந்தார் - (இச்சீதை தன்) துணையை
இழந்து விட்டாள் என்பதால் துன்ப இரக்கம் கொண்டு வருந்தினர்;
விண்டுவின் நாட்டவர் - திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தில்
வாழ்பவர்; பைம்பொன் மாரி சொரிந்தார் - பசிய பொன் மலர் மாரியைச்
சொரிந்தனர்; அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் - (சடாயு
விழுந்ததையும், விண்டு நாட்டவர் பொன்மாரி பொழி தலையும்) கண்ட சீதை
(உடலும் உள்ளமும்) நடுங்கினாள்.

     தன் சிறகுகளை இழந்து சடாயு நிலத்தில் விழுந்தமை கண்டு
விண்ணோர் அஞ்சி ஓடினர். முனிவர் வைதேகி துணை இழந்தாள் எனத்
துன்பம் கொண்டனர். வைகுண்ட வாசிகளான நித்திய சூரிகள் கற்பக மலர்
மாரி பொழிந்தனர். அது நோக்கிய சீதை அஞ்சி நடுங்கினாள். இரிந்தார் -
ஓடினார். பரிந்தார் - இரங்கினார். படர் - துன்பம் விண்டுவின் நாட்டவர் -
திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தில் வாழ்பவர்களாகிய நித்திய சூரிகள்;
அவர்கள் பொன் மலர் சொரிந்து சடாயுவைப் பரமபதத்திற்கு அழைத்துச்
செல்வர் என்பதாம். துளக்கம் - நடுக்கம். அது நோக்கிய - பன்மை
ஒருமையாக வந்தது செய்யுள் இன்பம் கருதிப் போலும்.             43