3446. | வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து, மிக்கான்; தொள்கின்தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள், உள்கும்; உயிர்க்கும்; உயங்கும்; ஒரு சார்வு காணாள், கொள் கொம்பு ஒடிய, கொடி வீழ்ந்தது போல் குலைவாள். |
வெள்கும் அரக்கன் - (சடாயுவின் போர் ஆற்றலுக்குத் தோற்று பின் வென்றதால்) வெட்கம் அடைந்த அரக்கனாகிய இராவணன்; நெடுவிண்புக ஆர்த்து மிக்கான் - நீண்ட ஆகாயத்தில் சென்று சேரும் படி பேரொலி செய்து (தன் வலிமையைப்) பாராட்டினான்; தொள்கின் தலை எய்திய மான் என - வலையில் அகப்பட்ட மான் போல; சோர்ந்து நைவாள் - (மனம்) தளர்ந்து வருந்துபவளாகிய சீதை; ஒரு சார்வு காணாள் - (தனக்கு எந்த) ஒரு பற்றுக் கோடும் காணாதவளாய்; உள்கும்- (யாது செய்வேன் என) எண்ணும்; உயிர்க்கும் - பெருமூச்சு விடுவாள்; உயங்கும் - மயங்குவாள்; கொள் கொம்பு ஒடிய - ஏறிப்படர்வதற்கு நட்ட கொம்பு ஒடிந்து விழுந்ததனால்; கொடி வீழ்ந்தது போல் - கொடி நிலை குலைந்து வீழ்ந்தது போல; குலைவாள் - (இரதத்தின் மீது விழுந்து) நிலை குலைவாள். சடாயுவின் ஆற்றலால் தன் தேர், பாகன் தண்டாயுதம் ஆகியவற்றை இழந்து தோற்ற இராவணன் வெட்கம் கொண்டு, சடாயுவை அரன் வாளால் அழித்த பெருமையைப் பேரொலி செய்து வெளிப்படுத்தினான். சீதை வலையில் அகப்பட்ட மான் போல் துன்புற்றுக் கொள் கொம்பு ஒடியக் குலைந்து விழுந்த கொடி போல் இரதத்தில் விழுந்து துன்பப்பட்டாள். மிக்கான் - பெருமிதம் கொண்டான். தொள்கு - வலை சார்வு -பற்றுக்கோடு. காணாள் - முற்றெச்சம். கொள் கொம்பு - வினைத் தொகை. 44 |