கலிவிருத்தம்

3447.'வன் துணை உளன் என
     வந்த மன்னனும்
பொன்றினன்; எனக்கு இனிப் புகல்
     என்?' என்கின்றாள்;
இன் துணை பிரிந்து, இரிந்து,
     இன்னல் எய்திய
அன்றில்அம் பெடை
     என அரற்றினாள்அரோ.

    வன்துணை உளன் என - (யான் உனக்கு) வலிமையான துணையாக
உள்ளேன் என்று; வந்த மன்னனும் பொன்றினன் - (எதிர்த்து) வந்த
கழுகரசனாகிய சடாயுவும் அழிந்தான்; எனக்கு இனிப்புகல்என் - எனக்கு
இனிக் கதி என்னவோ; என்கின்றாள் - என்று எண்ணுகின்றவள் ஆகிய
சீதை; இன் துணை பிரிந்து இரிந்து - இனிமையான தனது துணையாகிய
(ஆண் பறவையைப்) பிரிந்து நீங்கி; இன்னல் எய்திய - (பெருந்) துன்பம்
அடைந்த; அன்றில் அம் பெடை என - அன்றில் பறவையின் அழகிய
பெட்டை போல; அரற்றினாள் (அரோ) - கதறினாள்.

     என்னைக் காக்க வந்த வலிமையான துணைவன் ஆகிய சடாயு
அழிந்தான், இனி எனக்கு வேறு புகலிடம் ஏது?' என எண்ணிய சீதை
ஆணைப் பிரிந்த அன்றிற் பேடு போலத் துன்புற்றுக் கதறினாள். அன்றில் -
ஆணும் பெண்ணும் பிரியாமல் பனை மரத்தில் வாழும் ஒரு வகைப் பறவை
என்பது இலக்கிய மரபு. புகல் - சரண்புகுமிடம்; தொழிலாகுபெயர்.       45