3449.'நாண் இலேன் உரைகொடு
     நடந்த நம்பிமீர்!
நீள் நிலை அறநெறி
     நின்றுளோர்க்கு எலாம்
        ஆணியை, உந்தையர்க்கு
     அமைந்த அன்பனை,
காணிய வம்' என,
     கலங்கி விம்மினாள்.

    நாண் இலேன் உரை கொடு - நாணம் அற்றவளாகிய என்னுடைய
சொற்களைக் கேட்டு; நடந்த நம்பிமீர் - ('என்னைப் பிரிந்து) நடந்த
ஆடவர் திலகங்களே; நீள் நிலை அற நெறி - அழிவற்று நிலை
பெற்றுள்ள அற வழியில்; நின்றுளோர்க்கு எலாம் - ஊன்றி
நிற்பவர்களுக்கெல்லாம்; ஆணியை - உரையாணியை ஒத்தவனும்;
உந்தையர்க்கு அமைந்த அன்பனை - உங்கள் தந்தைக்குப் பொருந்திய
நட்பு உடையவனும் ஆகிய சடாயுவைக்; காணியவம் -
காண்பதற்காகவாவது வாருங்கள்; எனக் கலங்கி விம்மினாள் - என்று கூறி
மனம் கலங்கி விம்மி அழுதாள்.

     'என் சொற் கேட்டுப் பிரிந்தவர்களே அறத்தின் ஆணியை,
உந்தையர்க்கு அமைந்த உற்ற நண்பனைக் காணிய வருக' எனச் சீதை
கலங்கிக் கதறினாள். நாண் இலேன் உரை கொடு - இராமனிடம் மாய
மானைப் பற்றித் தரும்படி கேட்ட போது கூறிய

     "நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
     சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். (3303)

     என்ற பாடல் கருத்தையும், இலக்குவனிடம்

     "ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்,
     பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
     வெருவலை நின்றனை; வேறு என்? யான் இனி
     எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா, (3331)

     என்று கூறிய பாடல் கருத்தையும் உள்ளடக்கி வந்தது. ஆணி -
உரையாணி, பொன்னின் மாற்றைக் காட்டும் கல் எனலுமாம். உந்தையர் -
உம் தந்தையார் நின்றுளோர் - வினையாலணையும் பெயர், கொடு -
இடைக்குறை, வம் - வாரும் அல்லது வம்மின் என்பதன் விகாரம் என்பர். 47