3450.'கற்பு அழியாமை என்
     கடமை; ஆயினும்,
பொற்பு அழியா வலம்
     பொருந்தும் போர்வலான்
வில் பழியுண்டது;
     வினையினேன் வந்த
இல் பழியுண்டது' என்று,
     இரங்கி ஏங்கினாள்.

    கற்பு அழியாமை - கற்புக் கெடாமல் இருப்பது; என் கடமை
ஆயினும் -
எனது கடமையே ஆனாலும்; பொற்பு அழியா வலம்
பொருந்தும் -
அழகு (பண் பழகு) கெடாத வலிமை பொருந்திய; போர்
வலான் -
போர்த் தொழிலில் வல்லானாகிய இராமனது; வில் பழியுண்டது
-
(கோதண்டம் என்னும்) வில்லுக்குப் பழி வந்தது; வினையினேன் வந்த -
தீவினையினேன் ஆகிய (யான்) தோன்றிய; இல் பழியுண்டது - குடிக்குப்
பழி வந்தது; என்று இரங்கி ஏங்கினாள் - என்று கூறி வருத்தம் கொண்டு
அழுதாள்.

     இராமன் மனைவியாகிய எனக்குக் கற்பழியாமை கடன் என்று கற்புக்
கெடாது நான் இருந்தேன் என்றாலும், பெரு வலி பொருந்திய போர்த்
தொழில் வல்ல இராமனது வில்லுக்கும் யான் பிறந்த குடிக்கும் என்னால்
பெரும்பழி வந்தது' என்று கூறி வருத்தம் கொண்டு அழுதாள். வலம் -
வலிமை, வில் - கோதண்டம் என்னும் வில், இல் - குடி (வீடு எனக்
கொண்டு) ஆகுபெயர் எனினுமாம் அழியா - ஈறுகெட்ட எதிர் மறைப்
பெயரெச்சம். வினையினேன் - வினையாலணையும் பெயர்.            48