3451. | 'எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்! சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை நல் இயல் அருங் கடன் கழித்த நம்பியைப் புல்லுதியோ?' என, பொருமிப் பொங்கினாள். |
எல் இயல் - ஒளி பொருந்திய; விசும்பிடை இருந்த - வானுலகத்தில் இருந்த; நேமியாய் - ஆணைச் சக்கரத்தை உடைய தசரத சக்கரவர்த்தியே; சொல்லிய அறநெறி தொடர்ந்த - (நூல்களில்) சொல்லப்பட்ட அறவழியைத் தொடர்ந்து; தோழமை - நண்பனுக்குரிய; நல் இயல் அருங்கடன் கழித்த - நன்மை பொருந்திய அரிய கடனைக் கழித்த; நம்பியைப் புல்லிதியோ - சடாயுவை (வானுலகில்) தழுவிக் கொள்ளுவாயோ?; எனப் பொருமிப் பொங்கினாள் - என்று கூறி விம்மி அழுதாள். முன்பே வானடைந்த தசரதச் சக்கரவர்த்தியே! ஒரு நண்பனுக்கு உரிய கடன் கழிக்க வந்து உயிர் விட்ட உன் அருமைத் தோழனை அங்கு நீ தோழமை மகிழ்வோடு அணைத்துக் கொள்வாயா என்று சீதை விம்மி அழுதனள் என்க. எல் - ஒளி. தோழமை நல் இயல் அருங்கடன் - இடுக்கண்களைவதாம் நட்பு (குறள் 788) என்றபடி பிறர் செய்ய விரும்பாத, கடமை. 49 |