இராவணன் சீதையைத் எடுத்துச் செல்லுதல்

3452. ஏங்குவாள் தனிமையும்,
     இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும்,
     அரக்கன் நோக்கினான்;
வாங்கினன், தேரிடை
     வைத்த மண்ணொடும்,
வீங்கு தோள்மீக் கொடு,
     விண்ணின் ஏகினான்.

    ஏங்குவாள் தனிமையும் - (முன் சொன்ன படி) புலம்புகின்றவள்
ஆகிய சீதையினது துணையில்லாத தனிமையையும், இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும் -
சிறகு இழந்தவன் ஆகிய சடாயு அவ்விடத்து
அடைந்த நிலைமையையும்; அரக்கன் நோக்கினான் - அரக்கனாகிய
இராவணன் பார்த்து; தேரிடை வைத்த மண்ணொடும் வாங்கினன் -
(இனித் தடுப்பார் இல்லை என எண்ணி) தேரின் மேல் பெயர்த்து எடுத்து
வைத்த நிலத்தோடு சீதையை எடுத்து; வீங்கு தோள் மீக்கொடு - (தன்)
பருத்த தோள்களின் மேல் வைத்துக் கொண்டு; விண்ணின் ஏகினான் -
ஆகாய வழியில் (இலங்கையை நோக்கிச்) சென்றான்.

     சடாயு தேர்க் குதிரைகளைக் கொன்று (3438) தேர்ப் பாகனையும்
அழித்தமை (3436) யால் இராவணன் சீதையைத் தேரில் கொண்டு செல்ல
முடியாமையால் நிலத்தொடு பருத்த தோள் மீது ஏந்தி இலங்கையை
நோக்கிச் சென்றான் என இப்பாடலில் கவிஞர் கூறியுள்ளார். மீ - மேல்,
மண் - பர்ண சாலையொடு பெயர்த்து எடுக்கப்பட்ட மண். இதனை
"கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல் (3390) கொண்டான் உயர் தேர்
மிசை (3391) என்ற கவிஞர் வாக்கால் அறிக.                       50