3453.விண்ணிடை வெய்யவன்
     ஏகும் வேகத்தால்,
கண்ணொடு மனம் அவை
     சுழன்ற கற்பினாள்,
உள் நிறை உணர்வு அழிந்து
     ஒன்றும் ஓர்ந்திலள்;
மண்ணிடை, தன்னையும்
     மறந்து, சாம்பினாள்.

    விண்ணிடை - வான வெளியில்; வெய்யவன் ஏகும் வேகத்தால் -
கொடியவன் ஆகிய இராவணன் செல்லுகின்ற வேகத்தினால்; கண்ணொடு
மனம் அவை -
கண்களும் மனமும் ஆகிய அவை; சுழன்ற கற்பினாள் -
சுழலும் கற்புடையவள் ஆன சீதை; உள் நிறை உணர்வு அழிந்து -
உள்ளத்தில் நிறைந்த அறிவு அழியப் பெற்று; ஒன்றும் ஓர்ந்திலள் -
யாதொன்றையும் உணர முடியாதவளாகி; மண்ணிடை தன்னையும் மறந்து
சாம்பினாள் -
நிலத்தில் தன்னையும் மறந்து மூர்ச்சை அடைந்து சோர்ந்து
கிடந்தாள்.

     இராவணன் வானவெளியில் மண்ணொடும் கொண்டு போன
வேகத்தால் சீதை கண்ணும் மனமும் சுழன்று அறிவு அழிந்து மயங்கி
விழுந்தாள். ஓர்ந்திலள் - முற்றெச்சம்.                             51