சடாயு வானம் நோக்கி இரங்குதல் 3454. | ஏகினன் அரக்கனும்; எருவை வேந்தனும், மோக வெந் துயர் சிறிது ஆறி, முன்னியே, மாகமே நோக்கினென்; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு, அகம் புலர்ந்து சொல்லுவான்: |
அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; ஏகினன் - (மேல் கூறியவாறு) சென்றான்; எருவை வேந்தனும் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயுவும்; மோக வெந்துயர் சிறிது ஆறி - மயக்கம் தந்த கொடிய துன்பத்தில் இருந்து சிறிது தெளிந்து; முன்னியே - (சிறிது) எண்ணிப் பார்த்து; மாகமே நோக்கினென் - இராவணன் சென்ற திசையையே பார்த்து; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு - வஞ்சனை உடைய இராவணன் விரைவாகப் போதல் கண்டு; அகம் புலர்ந்து - மனம் வருந்தி; சொல்லுவான் - (கீழ்க் கண்டவற்றைச்) சொல்லத் தொடங்கினான். சடாயு மயக்கம் சிறிது ஆறித் தேறி இராவணன் செல்லும் திசையைப் பார்த்துச் சில சொல்லத் தொடங்கினான். மோகம் - மயக்கம். முன்னி - எண்ணிப் பார்த்து. மாகம் - திக்கு வானமுமாம். அகம் - மனம். 52 |