3455. | 'வந்திலர் மைந்தர்தாம்; "மருகிக்கு எய்திய வெந் துயர் துடைத்தனென்" என்னும் மெய்ப் புகழ் தந்திலர், விதியினார்; தரும வேலியைச் சிந்தினர்; மேல் இனிச் செயல் என் ஆம்கொலோ? |
மைந்தர் தாம் வந்திலர் - என் மக்கள் ஆகிய இராம இலக்குவர் வந்தார்களில்லை; மருகிக்கு எய்திய - மருமகளுக்கு நேர்ந்த; வெந்துயர் துடைத்தனென் - கொடுந்துன்பத்தை நீக்கினேன்; என்னும் மெய்ப்புகழ் தந்திலர் விதியினார் - என்கிற உண்மையான புகழை எனக்குக் கொடுத்திடாத விதியானவர்; தரும வேலியைச் சிந்தினர் - அற வேலியை முறித்து அழித்தவரானார்; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ - இனி மேல் விளையும் செயல் என்னாகுமோ? என் மக்கள் வந்தார்களில்லை, மருகிக்கு நேர்ந்த துயர் துடைத்து யான் மெய்ப் புகழ் பெற விதியினார் இடந்தந்திலர். அவரே அற வேலியை முறித்து அழித்தவரானார். இனி விளையும் செயல் யாதோ என்றபடி.விதியே தரும வேலியைச் சிந்தும் கருவியாக ஆனதால் தருமத்தைக்கொன்று வாழும் அரக்கர்களின் மேல் இனிச் செயத்தகு செயல் யாது உளதுஎன்றபடி. தருமவேலி - உருவகம். கொல் - ஐயப் பொருளில் வந்த இடைச்சொல். 53 |