3456. | 'வெற்றியர் உளர்எனின், மின்னின் நுண் இடைப் பொன்-தொடிக்கு, இந் நிலை புகுதற்பாலதோ? உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்; சிற்றவை வஞ்சனை, முடியச் செய்ததோ? |
வெற்றியர் உளர் எனின் - வெற்றி பெறும் (வலி படைத்த) இராமலக்குவர் அங்கு இருந்திருப்பர் எனின்; மின்னின் நுண் இடை - மின்னல் போல் விளங்குகிற நுண்மையான இடையையுடைய; பொன்- தொடிக்கு - பொன்னால் ஆகிய வளையலையும் (அணிந்த சீதைக்கு); இந்நிலை புகுதற் பாலதோ - இப்படிப்பட்ட துன்பம் தரும் நிலை நேர்ந்திருக்கக் கூடியதாகுமோ? (நேர்ந்திருக்காது என்றபடி); உற்றதை இன்னது என்று - அவர்களுக்கு நேர்ந்த நிலைமை இதுதான் என்று; உணரகிற்றிலேன் - அறிகின்றிலேன்; சிற்றவை வஞ்சனை - சிறியதாயாகிய கைகேயியினது சூழ்ச்சி; முடியச் செய்ததோ - (அவர்களுக்கு இத்தகைய துன்பமாக) முடியுமாறு செய்ததோ என்றபடி. இராம இலக்குவர் அவ்விடம் இருந்திருந்தால் சீதைக்கு இத்தகு கொடுமையான துன்பம் நேர்ந்திருக்காது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கைகேயியினது சூழ்ச்சி இவ்வாறு எல்லாம் முடியச் செய்ததோ என்று சடாயு எண்ணினான். இன் - உவம உருபு. பொன் தொடி - ஆகுபெயர். 54 |