3457. | 'பஞ்சு அணை பாம்பணை ஆகப் பள்ளி சேர் அஞ் சனவண்ணனே இராமன்; ஆதலால், வெஞ் சின அரக்கனால் வெல்லற்பாலனோ? வஞ்சனை இழைத்தனன், கள்ள மாயையால். |
பாம்பணை பஞ்சு அணை ஆக - ஆதிசேடன் என்கிற பாம்புப் படுக்கை பஞ்சு மெத்தை ஆக; பள்ளி சேர் - (அங்கு) திருவனந்தல் செய்தருளுகிற; அஞ்சன வண்ணனே இராமன் - நீல வண்ணனே இராமன்; ஆதலால் - ஆகையால், (அந்த இராமன்); வெஞ்சின அரக்கனால் - கொடிய சினம் உடைய அரக்கனாகிய (இராவணனால்); வெல்லற் பாலனோ - வெல்லுவதற்கு உரியனோ; கள்ள மாயையால் - (ஆகவே அவன்) திருட்டு மாயச் செயலால்; வஞ்சனை இழைத்தனன் - (இத்தகு) வஞ்சனைச் செயலைச் செய்து உள்ளான். இராமன் திருமாலவதாரம் ஆதலால் அவனை எதிர்த்து நின்று வென்று சீதையை எடுத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. கள்ள மாயையால் தான் அவன் சீதையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் எனச் சடாயு எண்ணினான் என்க. இப்பாடல் சடாயுவின் நுண்ணறிவுத் திறத்தையும், இதுதான் நடந்திருக்க முடியும் என்று உய்த்துணரும் திறமையையும் வாழ்வு அனுபவத்தின் கனிவையும் காட்டி நிற்றல் உணர்ந்து மகிழும்படி அமைந்துள்ளது. 55 |