| 3458. | 'வேர்அற அரக்கரை வென்று, வெம் பழி தீரும், என் சிறுவனும்; தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன், நல் மலர்ப் பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால்.' |
என் சிறுவனும் - என் மகனாகிய இராமனும்; அரக்கரை வேர் அறவென்று - (சீதையைக் கவர்ந்ததை முன்னிட்டு) அரக்கர்களை அடி வேரும் அழியுமாறு முழுதும் வென்று; வெம்பழிதீரும் - (தன்) கொடிய பழியைத் தீர்த்துக் கொள்வான்; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணனும்; நல்மலர்ப் பேர் உலகு அளித்தவன் - (திருமாலின் நாபிக்) கமலத்தில் தோன்றி இப்பெரிய உலகைப் படைத்த பிரமனது; பிழைப்பு இல் சாபத்தால் - தப்புதல் இல்லாத சாபத்தினால்; ஆரியன் தேவியைத் தீண்ட அஞ்சும் - சிறப்புடைய இராமனின் மனைவியாகிய சீதையைத் தொட அஞ்சுவான். வேர் அற - முழுதும் கெடும் படி, சிறுவன் - மகன் இங்கு இராமன் ஆல் - அசை. 56 |