3459. | பருஞ் சிறை இன்னன பன்னி உன்னுவான், 'அருஞ் சிறை உற்றனள் ஆம்' எனா, மனம்; 'பொரும் சிறை அற்றதேல், பூவை கற்பு எனும் இருஞ் சிறை அறாது' என, இடரின் நீங்கினான். |
பருஞ்சிறை - பெரிய சிறகுகளை உடைய சடாயு; இன்னன பன்னி - இத்தகைய சொற்களைச் சொல்லி; அருஞ்சிறை உற்றனள் ஆம் எனா மனம் உன்னுவான் - (சீதை) நீங்குதற்கு அரிய (இராவணனது) சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என்று மனத்தில் நினைத்து; பொரும் சிறை அற்றதேல் - போர் செய்கிற (என்) சிறகுகள் அழிவடைந்தது எனினும்; பூவை கற்பு எனும் இருஞ்சிறை அறாது என - நாகண வாய்ப்புள் போன்ற (இனிய மொழி பேசும்) சீதையினுடைய கற்பு என்கிற பெரிய சிறகு அழியாது என்று எண்ணி; இடரின் நீங்கினான் - துன்பம் நீங்கியவனானான். பலவாறு எண்ணிய சடாயு சீதை இராவணனது நீங்குதற்கு அரிய சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என எண்ணி, அவ்வாறெனினும் என் சிறகுகள் போலச் சீதையின் கற்பெனும் சிறகு அழியாது என எண்ணி வருத்தம் நீங்கினான். பருஞ்சிறை - பெரிய சிறகுகள்; இங்கு ஆகுபெயராய்ச் சடாயுவைக் குறித்தது. பூவை - நாகண வாய்ப்புள் (இனிய மொழி) குறித்தது. சிறையுற்றாலும் கற்பெனும் இருஞ்சிறை அறாது என்றதன் நயம் காண்க. திருக்குறட் கருத்தையும் உன்னுக. பருஞ்சிறை - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 57 |