சீதை சிறைப்படல்

3461. வஞ்சியை அரக்கனும்
     வல்லை கொண்டுபோய்,
செஞ்செவே திரு உருத்
     தீண்ட அஞ்சுவான்,
நஞ்சு இயல் அரக்கியர்
     நடுவண், ஆயிடை,
சிஞ்சுப வனத்திடைச்
     சிறைவைத்தான் அரோ.

     அரக்கனும் - அரக்கன் ஆகிய இராவணனும்; வஞ்சியை - வஞ்சிக்
கொடி போன்ற சீதையை; வல்லை கொண்டு போய் - விரைவாக எடுத்துக்
கொண்டு போய்; திரு உரு செஞ்செவே தீண்ட அஞ்சுவான் -
(சீதையின்) திருவுருவத்தை (வலிய) நேராகத் தொடுதற்கு அஞ்சியவனாய்;
ஆயிடை - அவ்விடத்தில்; சிஞ்சுபவனத்திடை - அசோக வனத்தின்
இடையில்; நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் - நஞ்சின் தன்மை
பொருந்திய கொடிய அரக்கியர்களுக்கு நடுவில்; சிறை வைத்தான் -
(சீதையைச்) சிறைக் காவலில் வைத்தான்.

     இராவணன் சீதையை விரைவாக மண்ணொடுங் கொண்டு போய்
அவளது திருவுருத் தீண்ட அஞ்சியவனாய் அசோக வனத்தில் நச்சுத்
தன்மை உள்ள அரக்கியர்களுக்கு நடுவில் சிறைக் காவலில் வைத்தான்.
வல்லை - விரைவாக. சிஞ்சுபவனம் - அசோக வனம். அஞ்சுவான் -
முற்றெச்சம். அரோ - அசை.                                  59