இராமலக்குவர் சந்திப்பு

3462. இந் நிலை இனையவன்
     செயல் இயம்பினாம்;
'பொன் நிலை மானின்பின்
     தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக'
     என, மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை
     பேசுவாம்அரோ.

    இனையவன் செயல் - இந்த இராவணனது செயலை; இந்நிலை -
இவ்வாறாக; இயம்பினாம் - எடுத்துக் கூறினோம்; பொன் நிலை மானின்
பின் -
பொன் மானின் பின்னால்; தொடர்ந்து போகிய - தொடர்ந்து
போன; மன் நிலை அறிக என - தலைவன் ஆகிய இராமனது தன்மையை
அறிவாயாக, என்று; மங்கை ஏவிய - சீதை கட்டளை இட்ட படி; பின்
இளையவன் -
(இராமனைத் தொடர்ந்து) பின்னால் போன
இலக்குவனுடைய; நிலை பேசுவாம் - தன்மையை இனிக் கூறுவோம்.

     இதுவரை இராவணன் செயலையும் சடாயு செயலையும் கூறிய நாம்,
இனிப் பொன் மானின் பின் போனவனைத் தொடர்ந்து சீதையின்
கட்டளைப் படி போன இலக்குவனின் செயலைக் கூறுவோம் என்றபடி.
அரோ - அசை.                                              60